Saturday, July 19, 2014

TNTET: இதயத்தில் கசியும் இரத்தம் துடைக்கப்படுமா?
விடிவு காலம் எப்போது??? 

இன்றாவது தணியும் நம் தாகம் என்று எண்ணியிருந்த நம் மனம் இன்றும் ஏமாற்றத்தையே அனுபவித்தது. தமிழக முதல்வர், தமிழக மக்களின் தாகம் தீர்த்த பெருமையை இன்று விதி எண் 110 ன் கீழ் வாசித்து அமர்ந்தாக செய்திகள் வாசிக்க படுகின்றது. விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகளின் கண்களில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நீதிமன்றத்தில் உறுதியுடன் போராடி 142 அடி தண்ணீர் தேக்குவதற்கு நீதிமன்ற தீர்ப்பாணை பெற்று தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி! தமிழக மக்களின் கண்ணீர் துடைத்த பெருமை நமது முதல்வரையே முழுமையாக சாரும்.

அதே சமயம் தமிழக முதல்வருக்கு, டெட் தேர்வர்களான எங்களின் கஷ்டங்களில் சில துளிகளை விளக்க விரும்புகிறோம் ...

இளைஞர்கள்;

கண்ணில் பல்வேறு எதிர்பார்ப்புகள். இளைஞர்களின் பெற்றோர் பலர் பராமரிக்க வேண்டிய முதியோர்களாக உள்ளனர். தமது அக்கா/தங்கையின் திருமணத்தை முன் நின்று நடத்த வேண்டிய கட்டாயம்.. பல்வேறு பொறுப்புகள்..

பெண்கள்;
பலருக்கு "திருமண நிச்சயதார்த்தம்" நடந்தும் திருமணம் நின்று போன நிலை. திருமணம் ஆனவர்களின் நிலையோ காண்போர் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும். பச்சிளம் குழந்தைகளை பிரிந்து, அந்த குழந்தையின் பசியை கூட ஆற்ற இயலாமல், குடும்ப பொறுப்புகளை மறந்து, உறவுகளை துறந்து, ”பணி நியமனம்” என்பதை மனதில் தேக்கி, புத்தங்களை கண்களில் தேக்கி பட்ட அவஸ்தை அதிகம்.

மூத்தவர்கள்;
சீனியாரிட்டியில் என்றாவது ஒரு நாள் வேலை கிடைக்கும் என்ற கனவுடன் ,கிடைத்த ஏதோவொரு வேலையை செய்துவிட்டு, படித்திருந்தும் சமுதாயத்திலும், குடும்பத்திலும் போதுமான அங்கீகாரம் இல்லாமல், ”முக்கா கிழவன் ஆனபிறகு, இவங்களுக்கு எங்க வேலை கிடைக்கப்போகுது” என்ற ஏளனப்பேச்சுக்கு இடையிலும் இளையோருடன் போட்டி போட்டு படித்து டெட் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, இதோ அறிவிப்பு வரும், அதோ அறிவிப்பு வரும் - என்று ஏங்கித் தவிக்கும் மூத்தவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று "கானல் நீர்" ஆனதென்னமோ உண்மை..


எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியில் இன்றும் நாங்கள் வாழ்ந்து(?????) கொண்டிருக்கிறோம் .. தரை மேல் பிறக்க வைத்தான் ... எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்றார் - இதய கனி. நீங்கள் எங்களை "கண்ணீரில்" மிதக்க வைக்காதீர்கள்.

அம்மையே, இன்று முழுவதும் கூடுதல் பணியிடம் குறித்து அறிவிப்பு வருமா? பணி நியமன தேதி குறித்து அறிவிக்கப்படுமா? என்று ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு யுகமாக கழித்தோம். விதி 110 குறித்து இலட்சம் முறை சிந்தித்திருப்போம். எங்கள் இதயங்களில் இரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. தாயன்புடன் துடைத்து விடுவீர்கள் என்று, நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

- என்றும் நம்பிக்கையோடு அனைத்து டெட் தேர்வர்கள் சார்பில்,

- ராம் ராம் - மதுரை B+

No comments:

Post a Comment