Tuesday, August 12, 2014

ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம்: நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை

அரசு பள்ளிகளில், புதிதாக நியமிக்கப் பட உள்ள ஆசிரியர்களில், தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைவு. வெறும், 772 இடங்கள் மட்டுமே, தமிழ் பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 'பாட வாரியான பணி நியமன வரிசையில், தமிழை, நான்காவது இடத்தில் வைத்திருப்பது தான், இதற்கு காரணம்' என, தமிழ் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் தேர்வில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, நேற்று முன்தினம், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 10,726 பணியிடங்கள் ஒதுக்கிஉள்ள போதும், தமிழ் பாடத்திற்கு, 772 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளன.

ஆங்கிலத்திற்கு அதிகம்:

ஆங்கிலத்திற்கு, 2,822 இடங்களும், வரலாறு பாடத்திற்கு, 3,592 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அறிவியல் பாடத்திற்கு, 1,600க்கும் அதிகமான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.தமிழ் பாடத்திற்கு மட்டும், பணியிடங்கள் எண்ணிக்கையை குறைத்து வழங்கியதற்கு, தமிழ் ஆசிரியர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து, தமிழ் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:அரசியல் தலைவர்கள், தமிழ் தமிழ் என, மூச்சுக்கு, முன்னூறு முறை கூறுகின்றனர். ஆனால், தமிழகத்தில், தமிழ் பட்டதாரிக்கு ஏற்பட்டுள்ள உண்மையான நிலை, இது தான். தமிழ் பாடத்தில், 9,500 பேர் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண் பெற்றபோதும், 772 பேருக்கு தான், வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது.

தமிழுக்கு முன்னுரிமை வேண்டும்:

மற்ற பாடங்களுக்கு இணையாக, தமிழ் பாடத்திற்கும், வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங் களை நிரப்புவதில், தமிழ் பாடத்திற்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு, தமிழ் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து, தமிழக தமிழாசிரியர் கழகத்தின், சென்னை மாவட்ட தலைவர், தாயுமானவன் கூறியதாவது:ஆசிரியர் நியமன வரிசை, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தமிழ், ஆங்கிலம் என, உள்ளது. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எனில், ஒரு வகுப்பில், 120 மாணவர்கள் இருந்தால், முதலில், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, மூன்று பாட ஆசிரியர் நியமிக்கப்படுவர். அதே வகுப்பில், 160 மாணவர்கள் இருந்தால் தான், தமிழ் பாடத்திற்கு, ஒரு பணியிடம் கிடைக்கும். அடுத்த 40 மாணவர்கள், கூடுதலாக இருந்தால் தான், ஆங்கிலத்திற்கு ஒரு பணியிடம் கிடைக்கும்.மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால், எட்டாம் வகுப்பு எடுக்கும் தமிழ் ஆசிரியரையே, 10ம் வகுப்பு தமிழ் பாடமும் எடுக்க சொல்கின்றனர். இதனால், புதிதாக ஒரு பணியிடம் கிடைப்பது தடைபடுகிறது. ஆங்கிலத்திற்கும் இதே நிலை தான்.

ஆங்கில பட்டதாரி ஆசிரியர்:

இதுவரை, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர் தான், ஆங்கில பாடம் நடத்தி வந்தனர். தற்போது தான், முதல் முறையாக, நேரடியாக, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுகின்றனர். அதனால், ஆங்கிலத்திற்கு, கூடுதல் பணியிடம் கிடைத்து உள்ளது.பணி நியமனத்தில், தமிழை முதலில் சேர்க்க வலியுறுத்தி, பள்ளிக்கல்வித் துறை செயலர், சபிதாவிடம், கோரிக்கை மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக, அவர் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை

காரணம் என்ன?

தமிழ் பாடத்திற்கு, குறைவான இடங்கள் ஒதுக்கீடு செய்தது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம் கூறியதாவது:காலி பணியிடங்களில், 50 சதவீதத்தை, பதவி உயர்வு மூலமும், 50 சதவீதத்தை, நேரடி பணி நியமனம் மூலமும், கல்வித் துறை நிரப்புகிறது.இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், 66.6 சதவீத இடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 33.3 சதவீத இடங்கள் மட்டுமே, நேரடியாக நியமிக்கப்படுகின்றன. இந்த முறையினால் தான், தமிழ் பாடத்திற்கு, இடங்கள் குறைவாக வருகின்றன.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
தமிழில் படித்தோருக்கான சிறப்பு இடஒதுக்கீடு அட்டவணைக்கு எதிரான மனு தள்ளுபடி

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பான அட்டவணையை எதிர்த்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நெல்லை கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த எஸ். கோமதிநாயகம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நான் பட்டப்படிப்பை தமிழில் படித்து தேர்ச்சி பெற்றேன். கடந்த 2010-ம் ஆண்டில் குரூப் 2 தேர்வு எழுதினேன். தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தது. இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டை எப்படி செயல் படுத்த வேண்டும் என்பதற்கு தனி அட்டவணை உருவாக்கப் பட்டுள்ளது. அந்த அட்டவணை தவறாக உள்ளது. இதனால், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அரசாணையின் நோக்கம் நிறைவேறவில்லை. எனவே, சிறப்பு இட ஒதுக்கீடு அரசாணை யின் நோக்கம் நிறைவேறும் வகையில் புதிய அட்டவணையை வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, டிஎன்பிஎஸ்சி அதிகாரி நேரில் ஆஜராகி, சிறப்பு இடஒதுக்கீடு எப்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்ற அட்டவணை தவறாக இருப்பதாகவும், புதிய அட்டவணை வெளியிட அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதன்படி, புதிய அட்டவணை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிடும்போது, இந்த வழக்கை முன்பு விசாரித்த நீதிபதி, முந்தைய அட்டவணைப்படி நடைபெற்ற நியமனங்கள், இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என உத்தரவிட்டார். எனவே, புதிய அட்டவணைப்படி மனுதாரருக்கு பணி வழங்க வேண்டும் என்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, புதிய அட்டவணை 2014 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் புதிய அட்டவணை இனிவரும் நியமனங்களுக்குதான் பொருந்தும். 2010 நியமனங்களுக்கு பொருந்தாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
பணி நியமன உத்தரவுகள், அஞ்சல் மூலம் அனுப்பும் பணி, நேற்றே துவங்கியதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது

தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற, 140 முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு, முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு நடந்தது. இதில், வரலாறு, வணிகவியல்,
பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களை, தமிழ் வழியில் படித்து, போட்டி தேர்வை எழுதி தேர்வு பெற்ற, 140 பேர், ஆறு மாதங்களுக்கு மேலாக, பணி நியமனமின்றி தவித்து வந்தனர். இவர்கள், நேற்று, கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து, பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர். 'ஒரு வாரத்திற்குள், 140 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்நிலையில், 140 பேருக்கும், பணி நியமன உத்தரவுகள், அஞ்சல் மூலம் அனுப்பும் பணி, நேற்றே துவங்கியதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. 15ம் தேதிக்குள், அனைவருக்கும், பணி நியமன உத்தரவு கிடைத்துவிடும் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது
சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் தகவல்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் எதிரே பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.பள்ளிக் கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கான 1,107 பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை.

சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 934 பேருக்கு பணி வழங்கவும் வலியுறுத்தல்.

ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் :
மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை.ஏற்கனவே வெளியான தேர்வு பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் இடம் பெற்றுள்ளனர்.பணிக்கு காத்திருப்பவர்கள் விவரம் அரசுக்கு தெரிவிக்கப்படும்:தேர்வு வாரிய உறுப்பினர் தகவல்.

Friday, August 8, 2014

தமிழகத்தில்
3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி: சங்க மாநில செயலர் தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மதுரையில் நாளை (9ம் தேதி) முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். மாணவர்களின் வேலை, கல்வி தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களுக்கு மெமோ வழங்குதல், சஸ்பெண்ட் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. அவற்றை உடனே நிரப்ப வேண்டும்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு குறித்து கருணாகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி பதவி உயர்வு, பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆசிரியர்கள் பாஸ்போர்ட் மற்றும் நிலம் வாங்க வேண்டும் என்றால் கூட இயக்குநர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் அனுமதி வழங்க வேண்டும். பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த திருச்சி, சென்னையில் மையம் அமைக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, August 6, 2014

TNTET - கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமான ஆசிரியர் தேர்வு நியாயமானதா?

இப்போது வருமோ, எப்போது வருமோ என்று பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அரசு பணிக்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியல். இந்த தேர்வுப் பட்டியல், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியிடப்படும் இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு உள்ளதையும் மறுக்க முடியாது.

வேறு எந்த தகுதியையும் கருத்தில் கொள்ளாமல், வேறுமனே மதிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொள்வது நியாயமானதா என்ற குமுறல்கள், பட்டதாரிகள் மத்தியில் பரவலாக உள்ளது.

இதுகுறித்து கல்விமலர் இணையதளத்திற்கு தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட, சில பெயர் குறிப்பிட விரும்பாத, அரசுப் பணியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சில பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க, TET என்ற தகுதித்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே எங்களுக்கு போதாத காலம் தொடங்கியது.

ரு தரமான ஆசிரியரை மதிப்பிட, TET என்ற தேர்வு மட்டுமே சரியான ஒன்றா என்ற கேள்வி இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்தப் பிரச்சினை கிடக்கட்டும். அந்த தேர்வையெழுதி, தேர்ச்சியும் பெற்றாகிவிட்டது.
ஆனால், தேவைக்கும் அதிகமான ஆசிரியப் பட்டதாரிகள் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதியானவர்களை தேர்வுசெய்ய, அரசு தரப்பில் கடைபிடிக்கும் நடைமுறைகள்தான் கொடுமையாக இருக்கின்றன.

வெறுமனே மதிப்பெண் அடிப்படை என்பது எப்படி சரியாக இருக்கும். 12ம் வகுப்புத் தேர்வில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1000 மதிப்பெண்கள் பெறுவதற்கும், இன்று அந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இன்றைய நிலையில், 1100 மதிப்பெண்களை மிகவும் சாதாரணமாக பெறுகின்றனர் மாணவர்கள். அதற்கேற்ப நடைமுறைகள் மாறிவிட்டன.

அதேபோல், பி.ஏ., ஆங்கில இலக்கியம் போன்ற பட்டப் படிப்புகளில், 10 ஆண்டுகளுக்கு முன்னால், 50% மதிப்பெண்கள் எடுப்பதே சிறப்பானதாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்றோ, 70% மதிப்பெண்களே சாதாரணம். நடைமுறைகள் அவ்வாறு மாறிவிட்டன. எனவே, மதிப்பெண்களை மட்டுமே வைத்து அளவிடுவது எந்த வகையில் நியாயம்?

மேலும், சமூகநீதி சலுகைகளான, கலப்புத் திருமணம் புரிந்தோர், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான முன்னுரிமை சலுகைகளுக்கு மதிப்பில்லையா? வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பல்லாண்டு காலம் காத்திருப்பவர்களுக்கு நீதி கிடைக்காதா?

நாங்கள் TET தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, அரசுப் பணிக்குத் தேர்வு செய்யும்போது பின்பற்றப்படும் நடைமுறைகள்தான் சிக்கலானவைகளாக உள்ளன.

எந்தவித நடைமுறை அறிவும், அனுபவமும் இல்லாத புதிதாக படிப்பை முடித்த ஆசிரியப் பட்டதாரிகள், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலான கட்-ஆப் என்ற நடைமுறையின் மூலம், தகுதியான ஆசிரியர்கள் என்ற பெயரில், பல மூத்த, அனுபவமிக்க, முன்னுரிமை தகுதிகளைப் பெற்று, TET தேர்விலும் தேர்ச்சிபெற்ற பட்டதாரிகளை புறந்தள்ளி, பணி வாய்ப்புகளைப் பெறுவது எந்த வகையில் நியாயம்?

வெறுமனே, பாடப்புத்தக அறிவு மட்டுமே தகுதியான ஆசிரியர்களை உருவாக்கி விடுமா? எனவே, தயவுசெய்து, கட்-ஆப் அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு என்ற நடைமுறையை கைவிட்டு, TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, பதிவு மூப்பு, முன்னுரிமை சலுகைகள், பணி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே, பணி நியமனம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கையை அரசு தயவுகூர்ந்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Monday, August 4, 2014

தாள் 2 இறுதி பட்டியல் இன்று நிச்சயம் வெளியாகும்

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இறுதி பட்டியல் வெளியாகும் தேதி குறித்த விசாரனைக்காக நேரடியாக சென்ற தேர்வர்களிடம் ஆ.தே.வாரிய
தலைவர் "தாள் 2 இறுதி பட்டியல் இன்று நிச்சயம் வெளியாகும்" என வாய்மொழியாக கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என கடவுளை பிரார்த்திப்போம்!

https://docs.google.com/file/d/0ByAQcFNqemV0M2Y4N0NORFMtMUE/edit?pli=1
இன்று TNTET பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் - தினமணி:

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப் பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேருக்கான -வெயிட்டேஜ்- மதிப்பெண் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த 42 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுசெய்யப்படுகின்றனர்.

http://www.dinamani.com/latest_news/2014/08/03/ஆகஸ்ட்-4-இல்-பட்டதாரி-ஆசிரியர/article2362593.ece