Saturday, September 19, 2015

CTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு: பேனா கொண்டு வர தடை


சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான, மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்), 20ம் தேதி நடக்கிறது; மூன்று லட்சம் பேர் எழுதுகின்றனர். மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய, 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையான ஆசிரியர் பணியில் சேர, முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை சேர, இரண்டாம் தாளையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தத் தேர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை, மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப் படுகிறது.தேர்வு முடிவு வெளியான தேதியிலிருந்து, ஏழு ஆண்டுக்கு இந்தச் சான்றிதழ் செல்லும். நடப்பு ஆண்டின் முதல் தேர்வு, பிப்ரவரியில் நடந்தது. இரண்டாவது தேர்வு வரும், 20ம் தேதி நடக்கிறது.
சி.பி.எஸ்.இ., அறிவிப்புநாடு முழுவதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர். இந்தியாவில், 77 மையங்களிலும், துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில், சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்தாள் பிற்பகல், 2:30 மணி முதல், 4 மணி வரையிலும், இரண்டாம் தாள் காலை, 9:30 மணி முதல் நண்பகல், 12மணி வரையிலும் நடக்கும்.
தேர்வு துவங்குவதற்கு, 90 நிமிடங்களுக்கு முன் வந்து விட வேண்டும்; தேர்வு எழுதுவதற்காக நீல மை பேனா வழங்கப்படும்; கணினி வழி ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் மட்டுமே எழுத வேண்டும்; தேர்வர்கள் தங்களுடன் பேனா உட்பட, எந்தப் பொருளும் கொண்டு வரக் கூடாது; தேர்வு நேரம் முடிவதற்கு முன், வெளியில் செல்லவும் அனுமதியில்லை. இவ்வாறு சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது

Thursday, September 3, 2015

ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு இல்லை


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பல ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; இவற்றில் சேர, எட்டு லட்சம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர். ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனம் குறித்து, பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையிலோ, அமைச்சர் பதில் உரையிலோ, அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தமிழகத்தில், 50 ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன; இவற்றில், 1.50 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, மத்திய அரசு உத்தரவுப்படி, குறைந்தது, நான்கு லட்சம் ஆசிரியர்கள் தேவை; ஆனால், இதில், 30 சதவீத இடங்களில் ஆசிரியர்கள் இல்லை. காத்திருப்பு: அதேநேரத்தில், ஆசிரியர் பணிக்காக, பி.எட்., மற்றும் எம்.எட்., படித்து விட்டு, எட்டு லட்சம் பேர், தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக சேர, மாநில அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.ஆனால், இரு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்படவில்லை.
எனவே, பெரும்பாலான பட்டதாரிகள் தகுதித்தேர்வு எழுதி, தனியார் பள்ளியில் கூட சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் வரும் முன், தமிழக அரசு, புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வை அறிவித்து, ஆசிரியர்களை நியமனம் செய்யும் என, பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நேற்றைய பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். போட்டி தேர்வு: சிறப்புபாடங்களுக்கு மட்டும், 1,188 பேர் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என, கூறப்பட்டு உள்ளது. .
இதுகுறித்து, அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'ஆசிரியர் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் சலுகை வழங்குவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், புதிய நியமனங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியவில்லை' என, தெரிவித்தனர். 1,390 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை:பள்ளிக்கல்வி மானியத்தில், அரசின் கொள்கை குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில், 76 ஆயிரத்து, 338 பாட வாரியான ஆசிரியர் பணியிடங்களில், 72 ஆயிரத்து, 843 பணியிடங்கள், இதுவரை நிரப்பப்பட்டு உள்ளன. பார்வையற்ற இளங்கலை பட்டம் பெற்ற, 654 பேருக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்க, பயிற்சி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பழங்குடியின பட்டதாரிகள், 906 பேருக்கு, 66 லட்சம் ரூபாய் செலவில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி தரப்படும்.மாற்றுத்திறனாளிகளின் இடைநிலை கல்விக்கு, அரசு பள்ளிகளில், 202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்.
மேலும், சிறப்பு ஆசிரியர் பணியிடங்களில், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி உள்ளிட்டவற்றுக்கு, 1,188 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்; இவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், போட்டித்தேர்வு விரைவில் அறிவிக்கப்படும். அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, 530 விரிவுரையாளர் மற்றும் உதவி பேராசிரியர், இன்ஜி., கல்லுாரிகளுக்கு, 192 உதவி பேராசிரியர், அரசு தொழில்நுட்பக் கல்லுாரிகளுக்கு, 605 உதவி பேராசிரியர் காலியிடங்கள் உள்ளன; இவற்றை நிரப்ப, விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளின் நிர்வாக வசதிக்கு, உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், ஆய்வக உதவியாளர் மற்றும் துப்புரவாளர் போன்ற இடங்களை நிரப்ப, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.