Monday, June 9, 2014

மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு முதல்நிலை எழுத்து தேர்வு 9 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினார்கள்

மாவட்ட கல்வி அதிகாரிகள் பணிக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 9 ஆயிரம் பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதத்திற்கு மேல் எழுத வரவில்லை.

முதல்நிலை தேர்வு 

பள்ளி கல்வித்துறையில் 11 மாவட்ட கல்வி அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் பெறப்பட்டன. மொத்தம் 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். முதல்நிலை தேர்வு நேற்று சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் தமிழ்நாடு முழுவதும் 39 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வரவில்லை. 9 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.

சென்னையில் எழும்பூரில் உள்ள மாநில மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடந்தது. அங்கு 400 பேரில் 222 பேர் வரவில்லை. 178 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.

தேர்வு எழுதியவர்களில் ஆண்களும், பெண்களும் உண்டு. பெண்களில் பலர் திருமணமாகி குழந்தை பெற்றவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு தேர்வு எழுதினார்கள்.

கருத்து

தேர்வு முடிந்து வெளியே வந்த தீபன் குமார் என்ற பட்டதாரி கூறுகையில், ‘நான் இயற்பியல் பாடத்தை விருப்பமாக எடுத்து படித்தவன். இந்த தேர்வில் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டிருந்தது. இயற்பியல், வேதியியல் கேள்விகள் எளிதாக இருந்தன. கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கஷ்டமாக இருந்தன. மொத்தத்தில் இந்த தேர்வு எளிதாக இருந்தது என்று கூற இயலாது’ என்றார்.

வடபழனியைச் சேர்ந்த செலீனா என்ற பெண் கூறுகையில், வேதியியல், இயற்பியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்டவவை எளிதாக இருந்தன என்றும், கணிதத்தில் இருந்து கேட்கப்பட்டவை சற்று சவாலாக இருந்தன என்றும் தெரிவித்தார்.

ஆசிரியர்கள்

தேர்வு எழுதியவர்களில் பலர், அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வும் நடத்தப்படும். பின்னர் இறுதியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

மாவட்ட கல்வி அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டால், அவர்கள் முதன்மை கல்வி அதிகாரியாகி, பள்ளி கல்வித்துறையில் இணை இயக்குனர் ஆகி, பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதவி வரை வரலாம். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment